மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக கூறப்படும் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விருதுநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு பலூன்களுடன் அமைதிப் பேரணி நடைபெற்றது.
விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், தொகுதி மறுவரையறை மூலம் தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடும் என காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற பேரணியில் 80-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், “REJECT DELIMITATION” என்ற வாசகம் எழுதப்பட்ட கருப்பு பலூன்களை கைகளில் ஏந்தியபடி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
விருதுநகர் காமராஜர் சிலை முன்பிருந்து தொடங்கிய அமைதிப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. பின்னர் தேசபந்து மைதானத்தை சென்றடைந்த பேரணி அங்கு நிறைவடைந்தது.
இந்தப் போராட்டத்தில் மாவட்ட, நகர, வட்டார அளவிலான காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென் மாநிலங்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

