நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் (CPCL) ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதில், இழப்பீடு வழங்கப்படாமல் விடுபட்ட குடும்பங்களுக்கு உடனடியாக தொகையை வழங்க வலியுறுத்தி, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.
சிபிசிஎல் ஆலையின் விரிவாக்கத்திற்காக சுமார் ரூ.31,500 கோடி மதிப்பீட்டில் 620 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் மற்றும் விவசாயக் கூலிகள் என மொத்தம் 2,163 குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இழப்பீட்டுத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கான நிதியை சிபிசிஎல் நிறுவனம் தமிழக அரசிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் மூலம் இதுவரை 1,769 பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 394 குடும்பங்களுக்கு இதுவரை தொகை வழங்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
விடுபட்ட குடும்பங்களுக்கும் உடனடியாக இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உத்தமசோழபுரம், பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்திய நிலையில், அவர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது போதிய எண்ணிக்கையில் பெண் போலீசார் இல்லாத நிலையில், ஆண் போலீசார் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், குழந்தைகளை கீழே தள்ளியதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். தள்ளுமுள்ளு மற்றும் போலீசாரின் தடியடி காரணமாக சில பெண்களுக்கு கைகளில் ரத்தக் காயம் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட விவசாயிகளை ஏற்றிச் சென்ற காவல் வாகனத்தை பெண்கள் மற்றும் பொதுமக்கள் தரையில் அமர்ந்து முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வாகனத்தை இயக்க முயன்றதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.
காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலையில் அமர்ந்து திடீர் மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் போராட்டத்தை கைவிட மறுத்த 500-க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
போராட்டம் மற்றும் போலீசாருடனான மோதல் காரணமாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நீண்ட நேரம் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

