விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறைக்குச் சொந்தமான சுற்றுலாத் தலங்கள் விளம்பரப் பலகையில், அரசியல் கட்சிப் பேனர்கள் ஒட்டப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
நான்கு வழிச் சாலையில் பொதுமக்கள் பார்வைக்குரிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த இரும்பு விளம்பரப் பலகையில், கடந்த இரண்டு மாதங்களாக விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் (செல்வம்) தனது கட்சி கொடி, பெயர் மற்றும் நிர்வாகிகளின் படங்களுடன் கூடிய விளம்பரப் பேனர்களை ஒட்டி வருவதாகக் கூறப்படுகிறது. அரசுக்குச் சொந்தமான பொது விளம்பரப் பலகைகளில் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்வது விதிமீறல் என்று சுட்டிக்காட்டியுள்ள மக்கள் நீதி மய்யம், மாவட்டச் செயலாளர் காளிதாஸ் தலைமையில் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளது. அதில், அரசு விளம்பரப் பலகைகளில் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், தற்போது ஒட்டப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

