கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை பகுதியில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு பழங்குடியினர் கிராமங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
வால்பாறைக்கு வருகைதந்த அமைச்சர் வன்னியரசு, மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பாலக்கிணறு மற்றும் நெடுங்குன்று ஆகிய பழங்குடியினர் வசிக்கும் வனக்கிராமங்களுக்குச் சென்று பார்வையிட்டார். அங்கு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், பொதுமக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது, தாட்கோ (TAHDCO) மூலம் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வரும் குடியிருப்பு கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், வால்பாறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிப்பதோடு, ஸ்கேன் மையம் உள்ளிட்ட அவசியமான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சர், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இக்கூட்டத்திற்கு முன்னதாக, மலைகிராம மக்கள் அமைச்சருக்குச் சிறப்பு வரவேற்பு அளித்தனர். இந்த ஆய்வின் போது துறைசார்ந்த உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

