வாணியம்பாடி அருகே விளையாட்டு மைதானம் அமைத்துத் தரக்கோரி, அரசு பேருந்தைச் சிறைப்பிடித்து, விளையாட்டுப் போட்டிகளில் வென்ற கோப்பைகளைப் பேருந்தின் முன்பு வைத்து இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சிக்கணாங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கிரிக்கெட், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றிக் கோப்பைகளையும் பரிசுகளையும் பெற்று வருகின்றனர்.
4 ஆண்டுகளாகக் கோரிக்கை; நடவடிக்கை இல்லை எனப் புகார்!
விளையாட்டுகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் முறையாகப் பயிற்சி பெறுவதற்காக, ஊராட்சிக்கு உட்பட்ட அரசு நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும் என்று கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இளைஞர்கள் குற்றம்சாட்டினர்.
இதனால் அதிருப்தியடைந்த இளைஞர்கள், இன்று சிக்கணாங்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்தைச் சிறைப்பிடித்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வென்ற கோப்பைகளைப் பேருந்தின் முன்பு வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை!
இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி துணைக் காவல் கண்காணிப்பாளர் மகாலட்சுமி தலைமையிலான போலீசாரும், வாணியம்பாடி வட்டாட்சியர் ஜெகதீசனும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தொடர்ந்து, இளைஞர்கள் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு ஏற்றதாகத் தேர்வு செய்துள்ள இடத்தை அதிகாரிகளுக்கு அழைத்துச் சென்று காண்பித்தனர். அந்த இடம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து, விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
200 ஏக்கர் அரசு நிலத்தில் 2 ஏக்கர் ஒதுக்க முடியாதா?
இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறுகையில், “போதைப் பொருட்கள் உள்ளிட்ட தீய பழக்கங்களைத் தவிர்த்து, விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தி உடல்நலத்தைப் பாதுகாக்கவும், பல்வேறு விளையாட்டுகளில் சாதிக்கவும் விரும்புகிறோம். இதற்காகவே விளையாட்டு மைதானம் கேட்டு தொடர்ந்து மனு அளித்து வருகிறோம்.
இந்த ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமாக 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், வெளியூரைச் சேர்ந்த வீடில்லாதவர்களுக்கு இங்கு அரசு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் இளைஞர்களுக்காக 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, இளைஞர்களுக்குத் தேவையான விளையாட்டு மைதானத்தையும் விளையாட்டு உபகரணங்களையும் ஏற்படுத்தித் தர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர்.
விளையாட்டுகளில் சாதித்து வரும் இளைஞர்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு அப்பகுதியில் எழுந்துள்ளது.

