ஒன்றரை லட்சம் கோடி முதலீடு கொண்டு வந்ததாக சொல்லக்கூடிய நீங்கள், உங்கள் காலடியில் இருக்கக்கூடிய இந்த பட்டாசு தொழிலை ஏன் இந்த அளவிற்கு நழிந்து போக விட்டிருக்கிறீர்கள்? என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவிற்கு தங்கம் தென்னரசு கேள்வி மூன்று மாத ஆட்சியில் தவெக தோல்வியை தழுவியுள்ளது,அதற்கு முதல் படி தாவிக்க அரசு தாக்கல் செய்த பட்ஜெட்தான் என விமர்சனம்.! ஆய்வு என்ற பெயரில் பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் வாழ்வை முடக்கும் தவெக அரசை கண்டித்தும் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும் விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிவகாசி பேருந்து நிலையம் அருகே திருச்சுழி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஆய்வு என்ற பெயரில் பட்டாசு தொழிலை நசுக்கும் தவெக அரசை கண்டித்தும், பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஆட்சி பொறுப்பேற்று மூன்று மாதங்களாகும் நிலையில், பட்டாசு தொழிலை பாதுகாப்பதற்குப் பதிலாக, அந்தத் தொழிலை நசுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதை கண்கூடாக பார்க்கிறோம்” என முன்னாள் நிதி அமைச்சரும், திருச்சுழி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார். பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் அவர் பேசியதாவது: பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று நாம் கூறுவது சில நிறுவனங்களின் தொழில் பாதிக்கப்படும் என்பதற்காக மட்டும் அல்ல. இந்த தொழிலை நம்பி வாழக்கூடிய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான். சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏறத்தாழ 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிலை நம்பி ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இத்தனை பேரின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய தொழில் முழுமையாக முடங்கிப் போகக்கூடிய நிலையை கண்டித்துத்தான் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இது ஒரு சாதாரண போராட்டம் அல்ல. நம்முடைய உரிமைக்குரலையும்,உணர்வுகளையும் எதிரொலிக்கக்கூடிய போராட்டம். நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்திலும் இந்த தொழிலை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானத்தை நாங்கள் அளித்துவிட்டு இங்கு வந்திருக்கிறோம். மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் மக்களின் குரலை ஓங்கி எழுப்பக்கூடிய ஜனநாயக சக்தியாக, தவறுகளை சுட்டிக்காட்டக்கூடிய எதிர்க்கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது. இரண்டு தினங்களுக்கு முன்புகூட பட்டாசு தொழிற்சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அந்த துயர சம்பவம் ஏற்பட்டிருக்கக்கூடாது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அந்த குடும்பங்களின் துயரத்தில் நாமும் பங்கேற்கிறோம். ஆனால், ஒரு விபத்தை காரணம் காட்டி ஒட்டுமொத்த பட்டாசு தொழிலையும் ஒரேடியாக முடக்கிவிட்டு, அதை நசுக்குவது எந்த வகையில் நியாயம் என்பதைத்தான் இந்த போராட்டத்தின் மூலம் கேள்வியாக எழுப்புகிறோம். ஒரு தொழிற்சாலை மூடப்பட்டால் அது அந்த நிர்வாகத்தோடு முடிந்துவிடாது. அந்த தொழிற்சாலையை நம்பி இருக்கக்கூடிய தொழிலாளர்களின் குடும்பங்களின் நிலை என்ன என்பதையும் அதிகாரிகள் எண்ணிப் பார்க்க வேண்டும். விதிகளை பின்பற்றாமல், விதிகளுக்கு முரணாக, உரிய விதிமுறைகள் இல்லாமல், அரசின் அனுமதியைப் பெறாமல் ஏதேனும் தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருந்தால், அந்த தொழிற்சாலைகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதை யாரும் தடுக்கப் போவதில்லை. யாராவது சட்டவிரோதமாக இந்த தொழிலில் ஈடுபட்டிருந்தால், அதை முழுமையாகத் தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதை வரவேற்கிறோம். ஆனால், அதைக் காரணம் காட்டி முறையாக உரிமம் பெற்று, முறையாக லைசென்ஸ் பெற்று, நாக்பூர் லைசென்ஸ் என்றாலும், மெட்ராஸ் லைசென்ஸ் என்றாலும், தேவையானவற்றை முறையாகப் பெற்றிருக்கக்கூடிய தொழிற்சாலைகளுக்குள் திடீர் ஆய்வுகள் என்ற முறையில் சென்று தொழிலை மொத்தமாக முடக்குவது எந்த வகையில் நியாயம்?இந்த நியாயத்தின் குரலைக் கேட்பதற்காகத்தான் இன்றைக்கு ஆயிரக்கணக்கானோர் இங்கே திரண்டிருக்கிறோம்.தீபாவளி நெருங்குகிறது; உற்பத்திக்கு இதுதான் முக்கிய காலகட்டம் தீபாவளி இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் வர இருக்கிறது. பட்டாசு தொழிலை பொறுத்தவரை இதுதான் மிக முக்கியமான காலகட்டம்.வெயில் அடித்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில்தான் பட்டாசு தொழிலை சிறப்பாக செய்ய முடியும். இன்னும் கொஞ்சம் காலம் சென்றால் மழைக்காலம் வந்துவிடும். மழைக்காலம் வந்துவிட்டால் இந்த தொழிலை மேற்கொள்ள முடியாது.அதற்குப் பிறகு தீபாவளி வந்துவிடும். உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத சூழ்நிலையும் உருவாகும். எனவே, உற்பத்தி, பேக்கிங், அனுப்பக்கூடிய டிரான்ஸ்போர்ட் என அனைத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அந்த பணிகளை இப்போதே செய்து முடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில், தொழில் பாதிக்கப்படுகிறதே என்ற கவலை அரசுக்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. பட்டாசு விற்பனையும் பாதிக்கப்படும் உற்பத்தியாளர் ஒருபுறம் பாதிக்கப்படுகிறார். இன்னொரு புறம் விற்பனை செய்யக்கூடியவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய பட்டாசு கடைகளில் ஒரு கிப்ட் பாக்ஸ் கூட வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. சாதாரணமாக பட்டாசு விற்பனையை நம்பி இருக்கக்கூடிய லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் ஆய்வுகள் என்ற பெயரில் அதிகாரிகள் நடத்தக்கூடிய இந்த போக்கு கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல; இந்த போக்கை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.“சிவகாசிக்கு என்ன மாற்றம் வந்தது?” “ஆட்சி வந்த உடனே மாற்றம் வரும்; சிவகாசி மாறிவிடும்” என்று கூறினீர்களே. சிவகாசியில் என்ன மாற்றம் வந்தது? சிவகாசிக்கு என்ன நன்மை செய்திருக்கிறீர்கள்?தி.மு.க. ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் சிவகாசியில் உள்கட்டமைப்பு வசதிகள் பல செய்யப்பட்டன. சாட்சியாபுரம் பாலமாக இருந்தாலும், திருத்தங்கல் பாலமாக இருந்தாலும், சிவகாசி ரிங் ரோடாக இருந்தாலும், சிவகாசி–விருதுநகர் மாநில நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதாக இருந்தாலும், சிவகாசி மண்ணில் மருத்துவமனையாக இருந்தாலும் இவை அனைத்தையும் செய்தது நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி தலைமையிலான ஆட்சி.“நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? இந்த மூன்று மாதங்களில் இருந்த தொழிலை எடுத்துக்கொண்டு போயிருக்கிறீர்கள்” என்ற கேள்வியை தங்கம் தென்னரசு முன்வைத்தார்.பட்டாசு தொழிலாளர்களுக்கு காப்பீடு எங்கே?ஒவ்வொரு தொழிற்சாலையிலும் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன. 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என்று கூறினீர்களா? அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? தற்போது பட்ஜெட் வந்திருக்கிறது. அந்த பட்ஜெட்டில் பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படும் என்று எங்கேயாவது கூறியிருக்கிறீர்களா?10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒரு தீயணைப்பு நிலையம் அமைப்போம் என்று எங்கேயாவது கூறியிருக்கிறீர்களா?ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஆம்புலன்ஸ் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறீர்களா?“உங்களுடைய மாற்றம் எல்லாம் இருக்கிறது; அள்ளிக்கொண்டு போங்கள்” என்று கூறும் அளவுக்கு, இந்த தொழிலுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எங்கே இருக்கின்றன என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.“ஒன்றரை லட்சம் கோடி முதலீடு என்கிறீர்கள்; பட்டாசு தொழிலை ஏன் நசிக்க விடுகிறீர்கள்?” தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை மூன்று மாதங்களுக்குள் கொண்டு வந்துவிட்டோம் என்று பிரசாரம் செய்கிறீர்கள்.ஒன்றரை லட்சம் கோடி முதலீடு கொண்டு வந்ததாக சொல்லக்கூடிய நீங்கள், உங்கள் காலடியில் இருக்கக்கூடிய இந்த பட்டாசு தொழிலை ஏன் இந்த அளவிற்கு நழிந்து போக விட்டிருக்கிறீர்கள்? என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவிடம் கேள்வி எழுப்பினார். சென்னையில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி முன்னேறிக் கொண்டிருக்கிறது, முதலீடுகள் வந்துகொண்டிருக்கின்றன என்று பேசுவது ஒருபுறம் இருக்கட்டும். சிவகாசியில் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகளை நம்பி வாழக்கூடிய லட்சக்கணக்கான குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து, அடுத்த வருடத்திற்கு என்ன செய்வோம் என்று கண்ணீரும் கம்பலையுமாக தவித்துக் கொண்டிருக்கின்றன.அவர்களுடைய நிலையை அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.“மக்களை நம்பி வந்த ஆட்சி அவர்களின் வாழ்வாதாரத்தை பார்க்க வேண்டாமா?”உங்களுக்காக ஓட்டு போட்டவர்கள், உங்களை நம்பியவர்கள், இந்த ஆட்சி ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று விரும்பியவர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில், ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள பட்டாசு தொழில் இன்று பாதிக்கப்பட்டு, அடுத்ததாக என்ன செய்வோம் என்ற கேள்வியோடு குடும்பங்கள் தவித்துக் கொண்டிருக்கின்றன.இந்த நிலையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.“தன் பெத்த ஆத்தா சாப்பாட்டுக்கு இல்லாமல் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும்போது, பெத்த பிள்ளை எல்லோருக்கும் கொடுக்கிறான்” என்ற பொருளைக் கொண்ட பழமொழியை சுட்டிக்காட்டிய தங்கம் தென்னரசு, தன்னை நம்பி ஓட்டு போட்ட மக்களின் வாழ்வாதாரத்தை அரசு முதலில் கவனிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.கல்வி நிதி குறைப்பு குறித்தும் கேள்வி அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக தி.மு.க. ஆட்சியில் ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது அந்த தொகை குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.கல்வித்துறைக்கு வழங்கப்பட்ட திட்ட நிதி ரூ.48 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில், தற்போது அது ஏறத்தாழ ரூ.44 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் ரூ.4 ஆயிரம் கோடி அளவிற்கு குறைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் பேசினார்.ஏற்கனவே இருந்த திட்டங்களுக்கான நிதியை குறைப்பதோடு மட்டுமல்லாமல், முந்தைய முதலமைச்சர் கொண்டு வந்த நல்ல திட்டங்களை புதிய திட்டங்களாக பெரிதுபடுத்திக் காட்டுகிறீர்கள் என்றும் அவர் விமர்சித்தார்.“இவை வெற்றி பெற்ற திட்டங்கள் அல்ல; வெற்றுத் திட்டங்களாகத்தான் இருக்கின்றன” என்ற கருத்தையும் சட்டமன்றத்திலும் தெரிவித்ததாக கூறினார். “மூன்று மாதங்களில் தோல்வியைச் சந்தித்த ஆட்சி”ஆட்சி பொறுப்பேற்ற மூன்று மாத காலத்திலேயே அரசு தோல்வியைச் சந்தித்துள்ளதாக தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார். நிதிநிலை தாக்கல் செய்ததில் தமிழக வெற்றிக்கழக ஆட்சி தோல்வியை தழுவியுள்ளது நிதிநிலை அறிக்கையிலும் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்றும் அவர் கூறினார்.அதேபோல், விருதுநகர் மாவட்டத்தின் வாழ்வாதாரமாகவும் ஜீவாதாரமாகவும் விளங்கி வரும் பட்டாசு தொழிலை முழுமையாக காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் உள்ளது என்றார். நூற்றாண்டு காலமாக தொடரும் இந்த தொழிலை சட்டப்படியும், மனசாட்சிப்படியும் பாதுகாக்கக்கூடிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், முறையாக உரிமம் பெற்று இயங்கி வரும் தொழிற்சாலைகள் திடீர் ஆய்வுகள் மற்றும் தேவையற்ற நடவடிக்கைகளால் முடங்காமல் இருப்பதற்கான சூழலை அரசு உருவாக்க வேண்டும்.“இந்த தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.
அரசியல்
பட்டாசு தொழிலை நசுக்காதே! – சிவகாசியில் தங்கம் தென்னரசு தலைமையில் மாபெரும் போராட்டம்
🕒 16 ஆக., 2026, 08:08 AM
⏱️ 6 நிமிடம் வாசிப்பு

