தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றக் கோரி வலுக்கும் குரல்கள்
அனைத்து அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் ஒலிப்பேழை இன்றி, அனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாட வேண்டும் என கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி அப்போதைய அரசாணை மூலம் அறிவுறுத்தப்பட்டது. அதன்படியே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு உரிய மரியாதையும் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இயங்கும் திருநெல்வேலி பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் பங்கேற்ற நிகழ்வின்போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வரிசையில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் சுற்றறிக்கை மற்றும் ஆளுநரின் ஆணையைச் சுட்டிக்காட்டி, இவ்விவகாரத்தில் அரசு போதிய நடவடிக்கை எடுக்காமல் மௌனம் சாதிப்பதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஒன்றிய அரசின் நேரடி அதிகார வரம்பிற்குட்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் அளிக்கப்பட்டு இசைக்கப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது. அவ்வாறிருக்க, ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதைக் காரணம் காட்டி, தமிழ்மொழிக்கான மரியாதையைக் குறைத்து மதிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
"தமிழைப் பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே" என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வரிகளை சுட்டிக்காட்டும் தமிழ் அமைப்பினர், இச்சம்பவத்திற்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும், வெறும் பேரவைத் தீர்மானத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், இதனை முறையான மசோதாவாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டமாக்க அரசு தயங்குவது ஏன் என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

