தமிழகத்தில் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்ததற்கு நாகையில் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக ரீதியில் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது, 2021 மே மாதம் முதல் 2026 ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கையை கருத்தில் கொண்டும் திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் மூலம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்றும், அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
மேலும், பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதலமைச்சரின் இந்த முடிவு விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.

