விபத்துக்குள்ளான 2 பட்டாசு ஆலைகளின் உரிமமும் தற்காலிக ரத்து
விருதுநகர் மாவட்டத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்துகள் தொடர்பாக, சிவகாசி அருகே விபத்து ஏற்பட்ட ஆலையின் போர்மேனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, விபத்து நடந்த இரு பட்டாசு ஆலைகளின் உரிமங்களையும் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் உள்ள வடிவேல் பட்டாசுத் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில், அங்கு பணிபுரிந்த ஈஸ்வரன் (55) என்பவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் ஆறுமுகச்சாமி, மேலாளர் தங்கத்துரை, மேற்பார்வையாளர்களான போர்மேன் கோபி கண்ணன் மற்றும் கணேசன் ஆகிய நான்கு பேர் மீது சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாதது மற்றும் கவனக்குறைவாக செயல்பட்டு உயிரிழப்புக்கு காரணமானது உள்ளிட்ட 4 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, போர்மேன் கணேசனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள உரிமையாளர் ஆறுமுகச்சாமி, மேலாளர் தங்கத்துரை மற்றும் போர்மேன் கோபி கண்ணன் ஆகிய மூவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மானகசேரியில் உள்ள ஹரிஷ்மா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சக்திவேல் (55), காளிராஜன் (50) ஆகிய இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சந்தனமாரி பாண்டியன் மற்றும் போர்மேன் காளிராஜ் ஆகிய இருவர் மீது 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இருவரையும் மல்லி காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, பாதுகாப்பு நடைமுறைகளை மீறி கவனக்குறைவாக செயல்பட்டதன் காரணமாக விபத்து ஏற்பட்டதாகக் கூறி, அனுப்பன்குளம் மற்றும் மானகசேரியில் விபத்து நடந்த இரு பட்டாசு ஆலைகளின் உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

