அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அருள்மொழி கிராமத்தில் உள்ள உக்கடை பெரிய ஏரியில் கடந்த சில மாதங்களாக முதலை ஒன்று சுற்றித்திரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குறிப்பாக, பகல் நேரங்களில் ஏரியில் உள்ள மண் மேடுகளில் முதலை படுத்து ஓய்வெடுப்பதை பொதுமக்கள் அவ்வப்போது பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஏரிக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அருள்மொழி கிராமம் கொள்ளிட ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ளதால், கொள்ளிட ஆற்றில் இருந்து முதலை ஏரிக்குள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஊரின் அருகே அமைந்துள்ள இந்த ஏரியின் கரையோரங்களிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படுகின்றன. மேலும், சில நேரங்களில் கால்நடைகள் ஏரிக்கரை பகுதிகளில் ஓய்வெடுப்பதும் வழக்கம். இந்நிலையில் முதலை நடமாட்டம் இருப்பதால் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதியில் முதலை நடமாட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது இருப்பதாகவும், தற்போது மீண்டும் முதலை தென்படுவதால் அச்சம் அதிகரித்துள்ளதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து, ஏரியில் முதலைகள் நடமாட்டம் இருப்பது குறித்து வனத்துறை மற்றும் காரைக்குறிச்சி ஊராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை அறிவிப்புகள் செய்யப்பட்டு, விழிப்புணர்வு போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.
எனினும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முதலை நடமாட்டத்தை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

