விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சத்திரப்பட்டியில் உள்ள கல்லூரியில் ஓணம் பண்டிகை கேரள பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மாணவ–மாணவிகள் கத்தகளி மற்றும் புலிவேடமணிந்து நடனமாடி மாவேலி மன்னரை உற்சாகமாக வரவேற்றனர்.
கேரள மாநிலத்தின் முக்கிய பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சத்திரப்பட்டி கல்லூரியிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கத்தகளி, புலிவேடத்தில் மாவேலி மன்னர் வரவேற்பு
செண்டை மேள வாத்தியங்களின் முழக்கத்துடன் மாணவ–மாணவிகள் ஆட்டம், பாட்டத்துடன் மாவேலி மன்னரை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
கத்தகளி மற்றும் புலிவேடமணிந்த மாணவர்கள் நடனமாடியபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர். பின்னர், வண்ணமயமான மலர்களால் அமைக்கப்பட்ட அத்தப்பூக்கோலத்தை சுற்றி கேரள பாரம்பரிய திருவாதிரை நடனம் ஆடி மாணவிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வேட்டி–சட்டை, கேரள சேலையில் மாணவர்கள்
ஓணம் கொண்டாட்டத்தில் மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்தும், மாணவிகள் கேரள பாரம்பரிய சேலை அணிந்தும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கேரள மற்றும் தமிழ் திரையிசை பாடல்களுக்கு மாணவ–மாணவிகள் நடனமாடினர். இதனால் கல்லூரி வளாகமே விழாக்கோலம் பூண்டது.
தமிழகத்தில் ஓணம் பண்டிகை பெரும்பாலும் கேரளத்தைப் போல வீடுகளில் பெரிய அளவில் கொண்டாடப்படாத நிலையில், கல்லூரியில் மாணவ–மாணவிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஓணம் கொண்டாடியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

