கரூரில் பட்டப்பகலில் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து தாக்கி, ஃபார்ச்சூனர் (Fortuner) காரில் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காந்திகிராமம் மைதானத்திற்கு வெளியே உள்ள புறக்காவல் நிலையத்திற்கு எதிரே, கிருஷ்ணராயபுரத்தை அடுத்த சித்தலவாயைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (27) என்பவர் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஃபார்ச்சூனர் காரில் வந்த மர்ம கும்பல் திடீரென அவர்களின் வழியை மறித்து, விக்னேஸ்வரனின் சட்டையைப் பற்றி இழுத்துத் தாக்கியதோடு, அவரை பலவந்தமாக காரில் ஏற்றவும் முயன்றது.
இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தான்தோன்றிமலை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், ஃபார்ச்சூனர் காரில் வந்த நபர்கள் வந்த வாகனத்தின் பதிவு எண், தெளிவாக அடையாளம் காண முடியாத வகையில் மறைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்னேஸ்வரன் தங்களது காரின் மீது கல் எறிந்து சேதப்படுத்தியதாக அந்த கும்பல் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. இருப்பினும், காரின் கண்ணாடிகள் எவற்ரும் உடையவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து இரு தரப்பினரிடமும் காவல்துறையினர் கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இளைஞரைத் தாக்கிய நபர்கள் தெரிவிக்கும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், கரூரில் நடுரோட்டில் பட்டப்பகலில் நடந்த இந்தத் தாக்குதலின் சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









