திருச்சி மாவட்டம், துறையூர் அருகே நரசிங்கபுரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி பெண்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மதுபானக் கடையால் அப்பகுதி பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குற்றம்சாட்டினர். மேலும், மது அருந்திய சிலர் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளின் முன்பு படுத்துக் கிடப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், டாஸ்மாக் கடையை அகற்றும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என கூறி பெண்கள் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் சித்ரா, டாஸ்மாக் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், நரசிங்கபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை ஒரு மாதத்திற்குள் இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தை பெண்கள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

