திண்டுக்கல் கொடைப்பாறைப்பட்டி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து ஊர்வலம் நடத்த முயன்ற சம்பவத்தில், இந்து முன்னணியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கொடைப்பாறைப்பட்டியில் உள்ள காளியம்மன் பகவதி அம்மன் கோவில் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் விநாயகர் சிலை வைப்பதற்கோ, பிரதிஷ்டை செய்வதற்கோ அல்லது ஊர்வலம் நடத்துவதற்கோ மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து ஊர்வலம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் சிலையை பறிமுதல் செய்தனர்.
பின்னர் சிலை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு, திண்டுக்கல் கோட்டை குளத்தில் அதிகாரிகள் முன்னிலையில் கரைக்கப்பட்டது.
அனுமதியின்றி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்றதாகக் கூறி, இந்து முன்னணியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

