விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அப்பகுதியில் 5.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் அய்யனார் கோவில் ஆற்றுப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஆற்றில் இறங்கி குளிக்கவோ அல்லது துணி துவைக்கவோ வேண்டாம் என்றும் வனத்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து தொடங்கியுள்ளதால், ராஜபாளையம், ஆலங்குளம், வெம்பக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

