Settings

முகப்பு/செய்திகள்/கல்வியில் தொடங்கி அரசியல் ஆலோசகர் வரை: அமைச்சர் கீர்த்தனாவின் இன்ஸ்பிரிங் ஸ்பீச்!
செய்திகள்

கல்வியில் தொடங்கி அரசியல் ஆலோசகர் வரை: அமைச்சர் கீர்த்தனாவின் இன்ஸ்பிரிங் ஸ்பீச்!

🕒 22 அக்., 2026, 11:36 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
கல்வியில் தொடங்கி அரசியல் ஆலோசகர் வரை: அமைச்சர் கீர்த்தனாவின் இன்ஸ்பிரிங் ஸ்பீச்!
✨

AI Highlights

  • •விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் முன்னாள் மாணவியும் அமைச்சருமான கீர்த்தனாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பெண்கள் தடைகளை உடைத்து சாதிக்க வேண்டும் என அவர் எழுச்சியுரையாற்றினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளியின் முன்னாள் மாணவியும், அமைச்சருமான கீர்த்தனா அவர்களுக்குச் சிறப்புப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய அமைச்சர் கீர்த்தனா, தனது கல்விப் பயணம், எதிர்கொண்ட தடைகள் மற்றும் அரசியலுக்கு வந்த அனுபவங்களைப் பகிர்ந்து மாணவிகளுக்கு ஊக்கமளித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது: "நமது பள்ளியில் கிடைக்கும் சிறிய வாய்ப்புகளைக் கூட எப்போதுமே நழுவ விடாதீர்கள்; அந்த வாய்ப்பு பிற்காலத்தில் எந்த அளவுக்கு உங்களுக்கு உறுதுணையாக இருக்கப் போகிறது என்பது அப்பொழுது தெரியாது. இந்த மேடைக்கு முன்பு நின்று பேசும் தைரியத்தை எனக்குக் கொடுத்த இங்குள்ள ஆசிரியர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

மேலும் பேசிய அவர், "நம் விருதுநகரில் ஒரு பாரம்பரியமான சுழற்சி நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதாவது, சத்திரியப் பள்ளி... அங்கு படிப்பு முடிந்தவுடன் வி.பி.எம்.எம். கல்லூரி... அதன் பிறகு திருமணம் என்ற இந்த வட்டச் சுழற்சி காலங்காலமாகத் தொடர்கிறது. இந்தச் சுழற்சியிலிருந்து பெண்கள் கண்டிப்பாக வெளிவர வேண்டும். நான் வி.பி.எம்.எம். கல்லூரியில் படித்து முடித்தவுடன் என்னைப் பெண் பார்க்க வந்தார்கள். அப்போது நான், 'லண்டன் சென்று உயர்கல்வி படிக்கப் போவதாகக்' கூறினேன். குடும்பச் சூழல் மற்றும் அச்சம் காரணமாக எனது தந்தை அதற்கு முதலில் முட்டுக்கட்டை போட்டார். இருப்பினும், எனது லட்சியத்தையும் விடாமுயற்சியையும் எடுத்துக்கூறி அப்பாவைக் சம்மதிக்க வைத்தேன். பிற்காலத்தில் நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று அறிவித்தபோது, என் தந்தைதான் எனக்கு மிகப்பெரிய பலமாக நின்று உதவினார். எனவே, பெற்றோர்களுக்கு இருக்கும் அச்சத்தைப் போக்கி, நமது திறமையின் மூலம் அவர்களது நம்பிக்கையைப் பெற வேண்டியது நமது கடமையாகும்" என்றார்.

தமது கல்வி மற்றும் பணி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், "பட்டப்படிப்பு முடித்துவிட்டு, வீட்டில் சொல்லாமல் மதுரையிலிருந்து பேருந்தில் சென்று VHNSN கல்லூரியில் எம்.எஸ்சி. புள்ளியியல் நுழைவுத் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றேன். அதன் பிறகு, பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் சேரச் சென்றபோது ஆங்கிலம், இந்தி அறியாமல் கிராமத்து மாணவியாகிய நான் பெரிதும் தயங்கினேன். ஆனால், பள்ளியில் நான் கற்றுக்கொண்ட கலைகளும் நடனமும் தான் பல மாநிலத்து மாணவர்களுடன் பழக எனக்கு உதவின. முக்கியமான பன்னாட்டு நிறுவனத்தில் மாதம் 30,000 ரூபாய் சம்பளத்தில் டேட்டா அனலிஸ்ட் வேலை கிடைத்த போதிலும், பெண்களின் முன்னேற்றத்திற்காகச் சமூக சேவையைத் தேர்ந்தெடுத்து மகாராஷ்டிராவில் உள்ள குடிசைப் பகுதிகளில் பணியாற்றினேன். அங்கு தொடங்கிய சமூகப் பணிதான் எனக்கு அரசியலில் தீவிர ஆர்வத்தை ஏற்படுத்தியது" என்றார்.

தமது அரசியல் பயணத்தைக் குறித்தும் அவர் பேசுகையில், "முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகிய மூன்று மாபெரும் தலைவர்களிடம் அரசியல் ஆலோசகராகப் பணிபுரிந்த அனுபவம்தான் எனக்கு அரசியலில் கால் பதிக்கத் தைரியத்தைக் கொடுத்தது. பணம் மற்றும் பின்புலம் இருந்தால் மட்டுமே அரசியலில் சாதிக்க முடியும் என்பதில்லை; நமது நல்லெண்ணமும் மக்களுக்கான சேவையும் இருந்தால் வெற்றி நிச்சயம். த.வெ.க. தலைவர் விஜய் அண்ணா அவர்களின் நம்பிக்கையும் வாய்ப்பும்தான் என்னை இன்று இந்த உயரத்தில் அமர வைத்துள்ளது. பெண்களுக்குத் தடைகள் பல வரலாம்; திருமணம்தான் வாழ்வின் இறுதி என்ற முடங்கிப்போன எண்ணங்களை மாற்றி, தடைகளை உடைத்து எறிந்து முன்னேறுங்கள். நீங்கள் சாதிப்பது உங்களை மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறைப் பெண்களையும் கைதூக்கிவிடும். இந்தச் சத்திரிய மகளிர் பள்ளியில் படித்த பெருமையை எப்போது நினைவில் கொள்வேன்" என உணர்வுபூர்வமாகப் பேசினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔