விருதுநகர் மாவட்டம் மேட்டமலை அருகே அழகர் நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே கல்குவாரி அமைக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அழகர் நாயக்கன்பட்டி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பெருமாள் கோவில் இருந்து வருவதாகவும், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் முக்கிய விசேஷ நாட்களில் கோவிலுக்கு வந்து வழிபட்டு வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளை தங்களது முன்னோர்கள் காலம் முதல் பல தலைமுறைகளாக பயன்படுத்தி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், கோவில் அமைந்துள்ள பகுதி சந்தையூர் ஊராட்சிக்கு உட்பட்டதாக இருப்பதாகவும், அந்த நிலத்திற்கு பட்டா இல்லாததால் நத்தம் நிலம் எனக் கூறி சிலர் அங்கு கல்குவாரி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவில் அருகே கல்குவாரி அமைக்கப்பட்டால் வெடிவைத்து பாறைகளை தகர்க்கும் பணிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளால் பெருமாள் கோவில் மற்றும் அருகிலுள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே, அப்பகுதியில் கல்குவாரி அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்து, கல்குவாரி அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

