விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில், தாலுகா காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள தனியார் ஓட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிழக்கு பாண்டி சாலையில் தாலுகா காவல் நிலையம் எதிரே எஸ்.எஸ். என்ற தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. ஓட்டலுக்கு விடுமுறை என்பதால் நேற்று கடை பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனூஷ் உள்ளிட்ட சில இளைஞர்கள் அங்கு வந்து பூட்டியிருந்த ஓட்டல் முன்பு பெட்ரோல் குண்டை வீசியதாக கூறப்படுகிறது.
பெட்ரோல் குண்டு வீசியதை அந்த இளைஞர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. ஓட்டல் அருகே தீப்பற்றி எரிவதை பார்த்து சாலையில் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உரிமையாளர் தீயை அணைத்தார்
ஓட்டலின் மேல் தளத்தில் வசித்து வரும் உரிமையாளர் சவுந்தரராஜன், சம்பவம் குறித்து அறிந்ததும் கீழே வந்து கடையைத் திறந்து தீயை அணைத்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர போலீசார், ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் இளைஞர்களை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம்?
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நேற்று ஓட்டலுக்கு சாப்பிட வந்த சில இளைஞர்கள் உணவு சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனை ஓட்டல் உரிமையாளர் கேட்டதால் அவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், இன்று ஓட்டல் பூட்டப்பட்டிருந்த நிலையில் அதன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
தாலுகா காவல் நிலையத்திற்கு சுமார் 100 மீட்டர் தொலைவில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பரபரப்பான கிழக்கு பாண்டி சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

