மயிலாடுதுறை அருகே உள்ள மேலமருதாந்தநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆறரை அடி உயர அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் விஜயதசமி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து இரவு பரதநாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ மர்தினி நாட்டியப் பள்ளி ஆசிரியர் ஸ்ரீ ருத்ராதேவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காயத்ரி ஜெப மந்திரம், மகிஷாசுரமர்த்தினி, நடேச கௌதவம், விநாயகர் பாடல், தேவி ஸ்துதி மற்றும் லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பரதநாட்டியமாக அரங்கேற்றப்பட்டன.
கலைஞர்களின் தாளத்திற்கேற்ப அமைந்த அழகிய அசைவுகளும் தத்ரூபமான அபிநயங்களும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக, மகிஷாசுரமர்த்தினி நாட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நாட்டிய நிகழ்ச்சியை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்த சின்னஞ்சிறு சிறுமி ஒருவர், கலைஞர்களைப் போலவே தானும் கைகளால் அபிநயம் பிடித்து நாட்டிய அசைவுகளைச் செய்ய முயன்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சிறுமியின் இந்த மழலைத் தனமான ஈடுபாடு அங்கிருந்த பார்வையாளர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.








