திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் 60 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, மதுரையைச் சேர்ந்த 30 வயது இளைஞரை கைது செய்துள்ளனர்.
துறையூர் பகுதியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார் துறையூர்–பெரம்பலூர் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கீழகுன்னுப்பட்டி பிரிவு சாலை அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த காரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால், கார் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் காரை தடுத்து நிறுத்த முயன்றபோது, லத்தியால் தாக்கியதில் காரின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் காரை மடக்கிப் பிடித்த போலீசார், காரை ஓட்டி வந்த மதுரை கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (30) என்பவரை கைது செய்தனர்.
காரில் சோதனை மேற்கொண்டபோது, தலா 2 கிலோ எடையுள்ள 30 பொட்டலங்களில் மொத்தம் 60 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், ஒடிசா மாநிலம் பள்ளிக்குடா பகுதியில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தபோது துறையூர்–பெரம்பலூர் சாலையில் போலீசாரிடம் சிக்கியதாக தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட கார்த்திக்கிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

