ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடற்கரைப் பகுதியில் கியூ பிரிவு காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியின்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த பைபர் படகு மடக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சோதனையில், இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர் அனுமதியின்றி இந்தியக் கடற்பகுதிக்குள் நுழைந்தது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பிடிபட்டவர்கள் இலங்கையைச் சேர்ந்த முகமது கான் என்ற கோகுலநாதன் (32), முகமது ஆசிக் என்ற யூனஸ் (25) மற்றும் தர்ஷன் என்ற பிரதீப் (34) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் தர்ஷன் என்பவர் கடந்த 26.02.2026 அன்று சுற்றுலா விசாவில் பெங்களூரு வந்து, நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியில் தங்கியிருந்துள்ளார்.
விசாரணையில் மேலும் தெரியவந்ததாவது: தர்ஷன் கடந்த அக்டோபர் 22 அன்று மாலை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முத்துராஜா என்ற கருப்பு என்பவரைத் தொடர்பு கொண்டுள்ளார். இலங்கையிலிருந்து இரண்டு நபர்களை கள்ளத்தனமாக இந்தியாவிற்கு அழைத்து வர ரூ.1,10,000 கூலி பேசுப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, பதிவு செய்யப்படாத நாட்டுப் படகில் தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் அருகே உள்ள ரெட்டதாழை கடற்கரையிலிருந்து புறப்பட்டுச் சென்று, இந்திய - இலங்கை கடல் எல்லையில் இருவரையும் ஏற்றிக்கொண்டு பாம்பன் திரும்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள படகு உரிமையாளர் முத்துராஜா என்ற கருப்புவை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.



