மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக் கருதி அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என வனத்துறை அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழையைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் நேற்று பிற்பகல் முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தேவதானப்பட்டி வனத்துறையினர் தடை விதித்தனர். அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு முழுவதும் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்ததால், அருவியில் நீர்வரத்து மேலும் அதிகரித்தது.
இதற்கிடையே, அருவிப் பகுதியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் தேவையின்றி ஆற்றுப்பகுதிக்குக் குளிக்கவோ, துணி துவைக்கவோ அல்லது ஆற்றைக் கடக்கவோ செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கும்பக்கரை அருவிக்கு வரும் நீர்வரத்து சீராகி, இதுகுறித்து மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை தொடரும் எனத் தேவதானப்பட்டி வனத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.



