புதிய கட்டிடம் கோரி பெற்றோர்கள் ஆட்சியரிடம் மனு
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கழுவனச்சேரி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியின் பழைய கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கழுவனச்சேரி கிராமத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளிக் கட்டிடம் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய நிலையில் இருப்பதாக கூறப்படுவதால், மாணவர்கள் அச்சத்துடனேயே பள்ளிக்கு சென்று வந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கடந்த ஜூன் மாதம் பெற்றோர்கள் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, மாணவர்களின் வகுப்புகளை தற்காலிகமாக கிராமத்தில் உள்ள பழைய பள்ளிக் கட்டிடத்தில் நடத்த அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி, தற்போது அங்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், மாணவர்களுக்காக புதிய மாற்றுப் பள்ளிக் கட்டிடம் கட்டித் தரப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உறுதி அளிக்கப்பட்டு சுமார் 3 மாதங்கள் கடந்தும் புதிய பள்ளிக் கட்டிடம் தொடர்பாக இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை என பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.
இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதுடன், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் உடனடியாக புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, கழுவனச்சேரி கிராம பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

