தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் வழங்கப்படும் 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாத்துறை சார்ந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சுற்றுலா தொழில் முனைவோர் மற்றும் ஓட்டல் நிறுவனங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான விருதுகளுக்கு www.tntourismawards.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சுற்றுலாத்துறை இயக்குநரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சுற்றுலா விருதுகளின் கீழ் சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயணப் பங்குதாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், சிறந்த தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
மேலும், பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளில் சிறந்த ஏற்பாட்டாளர், சிறந்த சிறப்பு சுற்றுலா நிறுவனம், சிறந்த மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலா நிறுவனம், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம் சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி மற்றும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் உள்ளிட்ட 13 வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன.
எனவே, விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தொழில் நிறுவனங்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் தகுதியான பிரிவுகளில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

