தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகள் வார விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பெரம்பலூரில் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 178 பயனாளிகளுக்கு ரூ.30.32 லட்சம் மதிப்பீட்டிலும், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ.2.61 லட்சம் மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.8.60 லட்சம் மதிப்பீட்டிலும், கூட்டுறவுத்துறை சார்பில் 4 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.68.20 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 254 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 21 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.12.83 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட புதிய கட்டடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகனிடம், அமுதம் அங்காடியில் ரேஷன் அரிசி பாலிஷ் செய்து வழங்கப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், மாறிவரும் பொருளாதாரச் சூழல், வளைகுடா நாடுகளிலிருந்து கிடைக்கும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போர்கள் காரணமாக சந்தையில் விலை ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பருவமழை தொடங்கியுள்ள இந்த குறுகிய காலத்தில், ஏழை, எளிய மக்களுக்குத் திட்டங்களை விரைவாகச் கொண்டு சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறினார்.
மழைக்காலங்களில் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு முக்கியத்துவம் தரும் அரசு, கிராமப்புற விவசாயிகளின் குறைகளைக் கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, இதுதொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தனியார் பள்ளிகளுக்கு நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது இதுதான்; தேர்வு முடிவுகளைக் காட்ட வேண்டும் என்பதற்காக மாணவர்களின் மனச்சுமையை அதிகரிக்காதீர்கள். பல நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய 'ஹிஸ்டாரிக்கல் எல் நினோ' தாக்கம் நிலவும் சூழலில், தனியார் பள்ளிகள் வார இறுதி நாட்களில் கட்டாயப்படுத்தி சிறப்பு வகுப்புகள் நடத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அப்துல் ராஸிக், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

