பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே, செல்போன் பேசிக்கொண்டே அதிவேகமாக இயக்கப்பட்ட தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.
பெருமத்தூர், கிளியூர், கீழப்புலியூர், நம்மையூர் புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் அருமடல் - பீல்வாடி சாலையில் தனியார் கல்லூரி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநர் செல்போன் பயன்படுத்தியவாறு பேருந்தை அதிவேகமாக இயக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தைத் தொடர்ந்து, பேருந்தின் பின்பக்கக் கண்ணாடியை உடைத்துக்கொண்டு மாணவ, மாணவிகள் வெளியேறினர். காயமடைந்தவர்கள் உடனடியாகக் கல்லூரிக்குச் சொந்தமான மற்றொரு பேருந்து மூலம் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்துத் தகவலறிந்த மருவத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் விஜய் தலைமறைவாகியுள்ள நிலையில், காவல்துறையினர் அவரைத் தேடி வருகின்றனர்.

