விருதுநகர் மாவட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் நவீன கருவிகளை மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
2026–27 நிதியாண்டில் வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் 392 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்குவதற்காக மொத்தம் ரூ.4.7832 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிப்பது, குறித்த காலத்தில் சாகுபடி பணிகளை முடிப்பது மற்றும் விவசாயிகளின் நிகர வருமானத்தை அதிகரிப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்தத் திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது.
யாருக்கு எவ்வளவு மானியம்?
சிறு மற்றும் குறு விவசாயிகள், ஆதிதிராவிடர் விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது அரசு நிர்ணயித்த அதிகபட்ச மானியத் தொகை வழங்கப்படும்.
எந்தெந்த கருவிகள் கிடைக்கும்?
திட்டத்தின் கீழ் பல்வேறு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட உள்ளன. அவற்றில்:
- சிறு மற்றும் பெரிய உழுவை இயந்திரங்கள்
- பவர்டில்லர்
- களை எடுக்கும் கருவி
- ரோட்டவேட்டர்
- விதை மற்றும் உரமிடும் கருவிகள்
- பருத்தி பறிக்கும் கருவி
- புல் வெட்டும் இயந்திரம்
- பல்வகை கதிரடிக்கும் இயந்திரம்
- வைக்கோல் கட்டும் இயந்திரம்
- தென்னை ஓலை வெட்டும் இயந்திரம்
- எடுத்துச் செல்லக்கூடிய கால்நடைக் கொட்டகை உள்ளிட்டவை அடங்கும்.
உழவன் செயலியில் விண்ணப்பிக்கலாம்
திட்டத்தில் பயன்பெற விரும்பும் தனிப்பட்ட விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 1 முதல் 7-ம் தேதி வரையிலும், 15 முதல் 21-ம் தேதி வரையிலும் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு மாதமும் 8 மற்றும் 22-ம் தேதிகளில் கணினி முறையில் நடைபெறும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு இயந்திரம் அல்லது கருவி வாங்குவதற்கான வழங்கல் ஆணை வழங்கப்படும்.
அதன்பின்னர், மானியத் தொகை கழித்த மீதமுள்ள தொகையை வங்கி வரைவோலை அல்லது RTGS மூலம் உற்பத்தியாளருக்கு செலுத்தியதும், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் அல்லது விநியோகஸ்தர் மூலம் இயந்திரம் வழங்கப்படும். அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு விதிமுறைகளின்படி மானியத் தொகை விடுவிக்கப்படும்.
தேவையான ஆவணங்கள்
விண்ணப்பிக்கும் விவசாயிகள் பின்வரும் ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்:
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- பட்டா
- அடங்கல்
- புலவரைபடம்
- ஆதார் அட்டை நகல்
- குடும்ப அட்டை நகல்
- சாதிச் சான்றிதழ்
- சிறு/குறு விவசாயி சான்றிதழ்
- வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல்
மேலும், திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்களது Farmer Registration பதிவை கட்டாயமாக மேற்கொண்டிருக்க வேண்டும்.
தொடர்புக்கு
விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி பகுதிகள்:
உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியரகம், விருதுநகர்
தொலைபேசி: 8838825538
திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் பகுதிகள்:
உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, திருவில்லிபுத்தூர்
தொலைபேசி: 9786390851
விருதுநகர் மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

