பொள்ளாச்சி அருகே கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் செயல்பட்டு வரும் பர்பிள் டாட்ஸ் பள்ளியில், மாணவர்களுக்கு எளிய முறையில் வேதிக் கணிதத்தை கற்றுக்கொடுக்கும் சிறப்பு முயற்சி நடைபெற்றது.
பள்ளியில் ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் தொடர்ந்து மூன்று மாதங்கள் வேதிக் கணிதப் பயிற்சி மேற்கொண்டனர். இதன் மூலம் கூட்டல், கழித்தல், வாய்ப்பாடு உள்ளிட்ட கணிதப் பயிற்சிகளை எளிதாகச் செய்யும் திறனை மாணவர்கள் பெற்றனர்.
இதன் ஒரு பகுதியாக, 1 முதல் 100 வரையிலான எண்களை அகர வரிசைப்படி ஒருசேர கூறுதல் உள்ளிட்ட கணிதத் திறன்களை மாணவர்கள் வெளிப்படுத்தினர். அவர்களின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வில் மொத்தம் 133 மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த சாதனை முயற்சி J.B.W.R. (Jackthi Book of World Records) உலக சாதனைப் பதிவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. சாதனை நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பதக்கங்கள் மற்றும் உலக சாதனைக்கான அங்கீகாரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த பர்பிள் டாட்ஸ் பள்ளியின் தலைமை ஆசிரியர் கனகதாராவும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
வேதிக் கணிதத்தின் மூலம் கணிதப் பாடத்தை எளிமையாகவும் ஆர்வமூட்டும் வகையிலும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்த பள்ளியின் முயற்சிக்கு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

