கோவை நவ இந்தியா பகுதியில் அமைந்துள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இளங்கலை மேலாண்மை, கணினி பயன்பாடு மற்றும் தளவாடங்கள் துறை சார்பில் “ராயல் எக்ஸ்போ 2026” என்ற பெயரில் கண்காட்சி நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியின் தொடக்க விழா, இந்துஸ்தான் கல்லூரி நிறுவனங்களின் செயலாளர் சரஸ்வதி கண்ணையன் மற்றும் துணைச் செயலாளர் பிரியா சதீஷ் பிரபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கொடிசியா நிர்வாகக் குழு உறுப்பினர் தினேஷ்குமார், அக்ரி இன்டெக்ஸ் துணைத் தலைவர் விஜயகுமார் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளரும் கவிஞருமான ‘தமிழ் இளவல்’ மதுரை வெ. ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் செண்பகவள்ளி, துறைத் தலைவர் சபிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராயல் எக்ஸ்போவில் மாணவ, மாணவிகள் 50-க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்து, தங்களது மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர் திறமைகளை வெளிப்படுத்தினர். பல்வேறு தலைப்புகளில் அமைக்கப்பட்ட அரங்குகள் மூலம் மாணவர்களின் படைப்பாற்றல், நிர்வாகத் திறன் மற்றும் புதிய சிந்தனைகள் வெளிப்பட்டன.
மேலும், கோவையைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் கண்காட்சியில் பங்கேற்று, தங்களது மேலாண்மைத் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ‘தமிழ் இளவல்’ மதுரை வெ. ராமகிருஷ்ணன், கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுடன் சிறப்பு கலந்துரையாடல் அமர்வை நடத்தினார்.
“கல்வியே சிறந்த ஆயுதம்” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிஜ உலக மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் கல்வியிலும் திறன்களிலும் சிறந்து விளங்க வேண்டும் என ஊக்கமளித்தார்.

