திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த இராமாயணதோப்பு பகுதியில் பாலாற்றின் கிளையாற்றில் மணல் கொள்ளைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் குளிக்கச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பஷீராபாத் பகுதியைச் சேர்ந்த அதனான் என்ற 10ஆம் வகுப்பு மாணவன், தனது நண்பர்களுடன் இராமாயணதோப்பு பகுதியில் உள்ள பாலாற்றின் கிளையாற்றுக்கு இன்று குளிக்கச் சென்றுள்ளான்.
அங்கு மணல் கொள்ளைக்காக தோண்டப்பட்டு மழைநீர் தேங்கியிருந்த ஆழமான பகுதிக்குச் சென்ற அதனான், எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மணல் கொள்ளைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் குளித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

