சிவகாசியில் தனியார் மனமகிழ் மன்றம் அருகே அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 2 பேரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சிவகாசி மாரியம்மன் கோவில் அருகே தனியார் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதிமுக கிழக்கு பகுதி பொருளாளர் சந்தான மணி மற்றும் அவரது நண்பர் மைக்கேல் ஜெயபிரகாஷ் ஆகியோர் நேற்று இரவு சென்றதாக கூறப்படுகிறது.
மது அருந்திவிட்டு இருவரும் வெளியே வந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த 4 இளைஞர்கள் அவர்களை பார்த்து தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. தொடர்ந்து, சந்தான மணி மற்றும் மைக்கேல் ஜெயபிரகாஷை சுற்றி வளைத்த அந்த இளைஞர்கள், இருவரையும் சரமாரியாக தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.
அப்போது பீர் பாட்டிலால் சந்தான மணியின் தலையில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் இருவருக்கும் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், இருவரை சிலர் சுற்றி வளைத்து தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

