மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நான்கு வழிச்சாலையில் மாடு மீது கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும், காரில் பயணித்தவர்களும் படுகாயமடைந்தனர்.
மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ சபரீஷ் (34). இவர் தனது குடும்பத்தினருடன் காரில் சிதம்பரத்திலிருந்து திருக்கடையூர் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு நான்கு வழிப் புறவழிச்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே மாடு ஒன்று பாய்ந்துள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மாட்டின் மீது மோதியதுடன், அருகில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும், இருசக்கர வாகனத்தில் பயணித்த காரைமேடு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் கௌசல்யா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த அப்பகுதி மக்கள் மற்றும் 108 அவசர ஊர்தி உதவியுடன், படுகாயமடைந்த ஆனந்த், கௌசல்யா மற்றும் காரில் பயணித்த ராஜ சபரீஷ் குடும்பத்தினர் 5 பேர் என மொத்தம் 7 பேரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து வைத்தீஸ்வரன்கோயில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சீர்காழி புறவழிச்சாலையில் வாகன விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அப்பகுதி மக்கள், சாலையோரக் கால்நடைகளைக் கட்டுப்படுத்தவும், வேகத் தடுப்புகளை அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறையும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.





