விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வீட்டின் மாடி அறையில் இருந்த பீரோவில் இருந்து 35 பவுன் தங்க நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டமலை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (54). இவர் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் மாடியில் உள்ள அறையில் இரண்டு இரும்பு பீரோக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய செல்வராஜ், தனது மனைவியின் நகைகளை கழற்றி, ஒரு இரும்பு பீரோவில் 55 பவுன் நகைகளை இரண்டு பகுதிகளாக பிரித்து வைத்துள்ளார். பின்னர் அந்த அறைக்கு அவர் செல்லவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மீண்டும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக மாடி அறைக்கு சென்ற செல்வராஜ், பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது சேலைகளுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.
அதே பீரோவின் மற்றொரு பகுதியில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகைகள் மட்டும் அப்படியே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செல்வராஜ் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மாயமானது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு விருதுநகர் மாவட்ட கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் போலீசார் நேரில் சென்று தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
வீட்டின் மாடி அறையில் பீரோவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 35 பவுன் நகைகள் மாயமான சம்பவம் மேட்டமலை கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

