நெல்லை டவுன் அடுத்த சீனியப்பன் திருத்து பகுதியில் அமைந்துள்ள கரீம்ஷா அவுலியா பள்ளிவாசல் பகுதியில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு முறையான சாலை மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தர வலியுறுத்தி, பள்ளிவாசல் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாநகராட்சி நெல்லை மண்டலத்தின் 15-வது வார்டுக்கு உட்பட்ட இப்பகுதி மக்கள், தங்களுக்குச் சாலை மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித் தரக் கோரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சீனியப்பன் திருத்து பகுதியில் இருந்து பிரதான சாலைக்குச் செல்ல பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில், வரும் 28-ஆம் தேதி பள்ளிவாசலில் கந்தூரி விழா நடைபெற உள்ளதால்,
அதற்கு முன்பாக பிரதான சாலையில் இருந்து பள்ளிவாசல் வரை தார்ச்சாலை அமைத்துத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகள் இனாயத்துல்லாஹ், பக்ருதீன், ஜலாலுதீன் மற்றும் ஜமாத்தார்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

