விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இலவச வீட்டு மனை பட்டா கோரி, அரசு நிலத்தை மக்களே சுயாதீனமாக அளவீடு செய்து ஆக்கிரமிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் கண்ணகி காலனியில் வசிக்கும் 130 குடும்பங்களுக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இருப்பினும், அதே பகுதியைச் சேர்ந்த மேலும் 90 குடும்பங்கள் நீண்ட காலமாக வீடற்ற நிலையில், வாடகை வீடுகளிலும் அரசு புறம்போக்கு நிலங்களில் தற்காலிகக் குடிசைகள் அமைத்தும் வசித்து வருகின்றனர்.
தங்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி, மாவட்ட நிர்வாகத்திடமும் வட்டாட்சியர் அலுவலகத்திலும் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அப்ப பொதுமக்கள், இன்று தங்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறைக்குச் சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தை தாங்களாகவே அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, குழிகள் தோண்டி எல்லைக் கற்களை நட்டு நிலத்தைக் கையகப்படுத்த முயன்றனர்.
இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த் துறை அதிகாரிகள், எல்லைக் கற்கள் நடும் பணியை உடனடியாகத் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, உரிய அனுமதியின்றி அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

