திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், “கிரைண்டர் செயலி” மூலம் இளைஞரை நேரில் சந்திக்க அழைத்து, தாக்கி செல்போன் மற்றும் வெள்ளி நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை சேர்ந்த முகம்மது ஜமீன் (24) என்பவர் கிரைண்டர் செயலியை பயன்படுத்தி வந்துள்ளார். அவரை செல்போன் எண்ணில் தொடர்புகொண்ட இசக்கிபாண்டி என்பவர் நேரில் சந்திக்க அழைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 11-ம் தேதி மாலை டக்கரம்மாள்புரம் மீட்பர் நகர் பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு முகம்மது ஜமீன் சென்றுள்ளார். அங்கு அவரை சந்தித்த வசந்தன் என்பவர், இசக்கிபாண்டியுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் டயோசிசன் நிர்வாகத்திற்கு சொந்தமான வடபுற காலியிடத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு வந்த மேலும் இருவர் முகம்மது ஜமீனை பிடித்து தாக்கியதாகவும், அவரை மிரட்டி அவரது உடைமைகளை பறித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முகம்மது ஜமீனின் கையில் அணிந்திருந்த வெள்ளி மோதிரம், கழுத்தில் அணிந்திருந்த வெள்ளி சங்கிலி மற்றும் செல்போன் ஆகியவை பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நால்வரும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கருப்பசாமி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய இசக்கிபாண்டி என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பறிக்கப்பட்ட செல்போன் மற்றும் வெள்ளி நகைகளை மீட்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 15 தினங்களில் திருநெல்வேலி மாநகர் மட்டும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
செய்திகள்
Grindr செயலி மூலம் அழைத்து இளைஞரை தாக்கி, வெள்ளி பொருட்கள் மற்றும் செல்போன் பறிப்பு - 3 பேர் கைது – மேலும் ஒருவருக்கு போலீசார் வலைவீச்சு!
The News Outlook
🕒 14 ஆக., 2026, 07:45 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

