பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத் திட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளின் பாசனத் தேவையை கருத்தில் கொள்ளாமல், திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க முயற்சிப்பதாக கூறி, நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது 2 மற்றும் 3-ம் மண்டல பாசனத்திற்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாக பாசனக் கால்வாய்களை தூர்வார தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சட்டமன்றத்தில் ரூ.14.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அந்த நிதி இதுவரை விடுவிக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். கால்வாய்கள் தூர்வாரப்படாததால் பாசன நீர் முறையாக கிடைக்காமல் தென்னை மரங்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத் திட்டத்திற்கு தொடர்பில்லாத உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொள்வதாகக் கூறி, பொள்ளாச்சி–உடுமலை சாலையில் உள்ள நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை ஆயிரக்கணக்கான பாசன சபை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக தெரிவித்த விவசாயிகள், அங்கேயே உணவு சமைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தென்னை விவசாயிகள் விலைக்கு தண்ணீர் வாங்கி பாசனம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளத

