கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள ஆர்ச்சம்பட்டியில், ரிசார்ட் அனுமதி பெற்று பன்றி வளர்ப்புப் பண்ணை நடத்தப்படுவதாகவும், இதனால் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குளித்தலை அருகே ஆர்ச்சம்பட்டியில் இனாம் புலியூர் செல்லும் சாலையில், பெயர் பலகை ஏதுமின்றி செயல்பட்டு வரும் ஒரு ரிசார்ட்டை திருச்சியைச் சேர்ந்த செந்தில் என்பவர் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ரிசார்ட் கட்டுவதற்காக அனுமதி பெறப்பட்டு, கட்டிடத்தைச் சுற்றி ஆள் உயரத்திற்கு மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் நடத்திய விசாரணையில் அங்கு ரிசார்ட் இயங்கவில்லை என்பதும், பன்றி வளர்ப்புப் பண்ணை செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது. கறிக்காக வளர்க்கப்படும் பன்றிகள் அங்கேயே வெட்டப்பட்டு விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பன்றிக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் அருகிலுள்ள நிலங்களில் கொட்டப்படுவதால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் பொதுமக்கள் சுவாசிப்பதில் சிரமப்படுவதோடு உடல்நலப் பாதிப்புகளுக்கும் ஆளாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசார்ட் அனுமதி பெற்று பன்றிப் பண்ணை நடத்தி வரும் நபர் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

