பழனி அருகே புஷ்பத்தூரில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில், நீட் தேர்வு மற்றும் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளைப் பாராட்டும் விழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உடுமலை–பழனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புஷ்பத்தூர் ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளரும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் ஏற்பாடு செய்து வழிகாட்டினார்.
விழாவில் திரைப்பட இயக்குநரும் சிந்தனைப் பேச்சாளருமான கரு. பழனியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நீட் தேர்வு மற்றும் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி அவர் பாராட்டினார்.
தொடர்ந்து மாணவர்களிடையே உரையாற்றிய கரு. பழனியப்பன், உயர்கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கை குறித்து மாணவர்கள் தெளிவான இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
பெரிய கனவுகளை உருவாக்கி, அவற்றை அடைவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டால் எதிர்காலத்தில் சிறப்பான நிலையை அடைய முடியும் என்றும் மாணவர்களுக்கு அவர் ஊக்கமளித்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

