நீலகிரி மாவட்டம், உதகை - கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண் சரிவில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, உதகை - கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேல் கோடப்மந்து தேயிலை தொழிற்சாலை அருகே திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
இந்த விபத்தில், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மண் சரிந்து விழுந்ததில் அவை சேதமடைந்தன. மண் சரிவு காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினரும், நெடுஞ்சாலைத்துறையினரும் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் மண்ணை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

