ஒன்பதாவது தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி, “ஊட்டச்சத்து அனைவரின் பொறுப்பு” என்ற கருப்பொருளில் பெரம்பலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அப்துல் ராஷிக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 8 வரை ஊட்டச்சத்து மாதம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், ஒன்பதாவது தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பொதுமக்களிடையே ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, “ஊட்டச்சத்து அனைவரின் பொறுப்பு” என்ற கருப்பொருளில் பெரம்பலூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் அப்துல் ராஷிக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி தொடங்குவதற்கு முன்னதாக, ஊட்டச்சத்து விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
பாலக்கரை பகுதியில் இருந்து புறப்பட்ட பேரணி வெங்கடேசபுரம் வழியாக சென்று ரோவர் வளைவு பகுதியில் நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக் குழுவினர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் கைகளில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் சென்றனர். மேலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் பேரணியில் பங்கேற்றனர்.

