சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு விரைவில் முக்கிய சலுகையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், தினசரி பயணங்களுக்காக அடிக்கடி சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய சிரமம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், சுங்கச்சாவடிகளின் 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்காக சிறப்பு "லோக்கல் டோல் பாஸ்" முறையை அறிமுகப்படுத்த பரிசீலித்து வருகிறது. இந்த பாஸ் ஆதார் அடிப்படையிலான முகவரி சரிபார்ப்புடன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய திட்டத்தின் கீழ், தகுதியான குடியிருப்பாளர்களுக்கு டிஜிட்டல் அனுமதிச் சீட்டு வழங்கப்படும். இது அவர்களின் முகவரி மற்றும் தகுதியை உறுதிப்படுத்த உதவும். அனுமதி பெற்றவர்கள் எதிர்காலத்தில் அமல்படுத்தப்படவுள்ள தடையற்ற (Barrier-less) டோல் வசூல் முறையில், மீண்டும் மீண்டும் கட்டணம் செலுத்தாமல் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு மாதாந்திர பாஸ் வசதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் புதிய டிஜிட்டல் லோக்கல் பாஸ் அதைவிட குறைந்த செலவில், அதிக வசதிகளுடன் கிடைக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஆதார் அட்டை, வாகன பதிவு சான்றிதழ் (RC) மற்றும் முகவரி சான்று போன்ற ஆவணங்கள் மூலம் உள்ளூர் பாஸ் பெறும் நடைமுறைகள் ஏற்கனவே சில சுங்கச்சாவடிகளில் நடைமுறையில் உள்ளன. புதிய திட்டம் அமலுக்கு வந்தால், சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் நேரமும் பணமும் மிச்சப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

