உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் வாக்குவாதம்; போலீசார் விசாரணை
விருதுநகர் அருகே பாவாலியில் உள்ள அப்பள கம்பெனியில் பணிபுரிந்து வந்த 27 வயது ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகரைச் சேர்ந்த சுந்தரமூர்த்திக்கு சொந்தமான ஆர்.எம்.எஸ். அப்பள கம்பெனி பாவாலியில் செயல்பட்டு வருகிறது. இங்கு வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் தென்னமநல்லூர் பகுதியைச் சேர்ந்த முனியாண்டியின் மகன் விஜயராஜ் (27), கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக கம்பெனி வளாகத்திலேயே தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு கம்பெனி வளாகத்தில் உள்ள தகர செட் பகுதியில் விஜயராஜ் தூங்கியுள்ளார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்காததால், உடன் பணிபுரிந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த மருத்துவக் குழுவினர் விஜயராஜை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது உறவினர்கள், விஜயராஜின் உடலை உடனடியாக எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் கம்பெனி உரிமையாளர் தரப்பினரிடமும் போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விஜயராஜின் குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், அவரது மரணம் கொலையா அல்லது இயற்கையான முறையில் ஏற்பட்டதா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தினர்.
இதனால் விஜயராஜின் உடலை உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆமத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பின்னரே விஜயராஜின் மரணத்திற்கான காரணம் குறித்து தெளிவான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

