காசநோய் ஒழிப்பு என்பது சுகாதாரத்துறையின் நடவடிக்கையாக மட்டும் இல்லாமல் பொதுமக்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய சமூகப் பொறுப்பாகும் - மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி, இ.ஆ.ப. அவர்கள் அறிவுறுத்தல் அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், காசநோய் இல்லா இந்தியா இயக்கத்தின் கீழ், காசநோய் தடுப்பு மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள “ஜோஷ்” அணியின் தொடக்க விழா, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: காசநோய் என்பது முழுமையாக குணப்படுத்தக்கூடிய நோயாகும். காசநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மருத்துவர்களின் ஆலோசனையின்படி முறையான சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். எனவே பொதுமக்கள் காசநோயின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதுடன் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். காசநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதுடன் அவர்களுக்கு தேவையான ஆதரவையும் வழங்குவது சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாகும்.
காசநோய் தொடர்பான தவறான நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தயக்கங்களை களைந்து காசநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும். காசநோய் ஒழிப்பு என்பது சுகாதாரத்துறையின் நடவடிக்கையாக மட்டும் இல்லாமல் அனைத்து துறைகளும், உள்ளாட்சி அமைப்புகளும், தன்னார்வ அமைப்புகளும், பொதுமக்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய சமூகப் பொறுப்பாகும். பொதுமக்களிடம் காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி நோயின் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் நம்; செயல்பாடுகள் அமைய வேண்டும். காசநோய் பாதிப்பிற்குள்ளானவர்களை உரிய முறையில் கண்டறிந்து சிகிச்சைக்கு உட்படுத்துதல், சிகிச்சை பெறுவோருக்கு தொடர்ந்து ஆதரவளித்தல் மற்றும் நோய் பரவலைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் வகையில் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்து கொசுப்புழு உற்பத்தியைத் தடுப்பதன் மூலம் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் நோய்கள் பரவாமல் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார். தொடர்ந்து 2025-2026ம் ஆண்டிற்கான அரியலூர் மாவட்டத்தில் காச நோய் பாதிப்பை குறைத்த ஊராட்சிகளை சேர்ந்த 76 கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் காச நோய் தடுப்பு மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பின்னர், காசநோய் தடுப்பு மற்றும் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சிதலைவர் அவர்கள் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) மரு.வி.ராஜசெல்வம், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.எஸ்.ராம்கணேஷ், துணை இயக்குநர்(காசநோய்), மரு.ஆர்.நெடுஞ்செழியன், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, முதல்வர், மரு.சி.குமரன், மருத்துவர்கள் ஊராட்சி செயலாளர்கள், தொடர்புடைய துறை சார்நத அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், அரியலூர்.

