பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை ரயில் நிலையம் தனது 137-வது பிறந்தநாளைக் கொண்டாடியது.
கடந்த 1889ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரயில் நிலையம், அன்று முதல் இன்று வரை பல்வேறு பரிமாணங்களை எட்டியுள்ளது. குறிப்பாக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களையும், பௌர்ணமி கிரிவலத்தின்போது பல்லாயிரக்கணக்கான பயணிகளையும் கையாளும் முக்கிய மையமாக இது திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை ரயில் நிலையம் தொடங்கப்பட்டு 137 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தென்னக ரயில்வே அதிகாரிகள் சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டங்கள் நடைபெற்றன. மேலும், அன்றைய காலம் முதல் தற்போது வரை தென்னக ரயில்வேயின் வளர்ச்சிப் பயணத்தைக் விவரிக்கும் புகைப்படக் கண்காட்சியும், பழங்கால ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட டெலிபோன் உள்ளிட்ட உபகரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தென்னக ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக வந்தே மாதரமும், அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களிடையே இது சலசலப்பை ஏற்படுத்தியது.









