விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாதங்கோவில்பட்டி பகுதியில் புனித செபஸ்தியார் குருசடியில் இருந்த ஏசு கிறிஸ்துவின் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மாதங்கோவில்பட்டியில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் குருசடியில் வைக்கப்பட்டிருந்த ஏசு கிறிஸ்துவின் சிலை இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிவகாசி–ஆலங்குளம் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சிலை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

