விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ள பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீர்வரத்து அதிகம் உள்ள பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு நடத்தி, பொதுமக்களுக்குப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில், சதுரகிரி, அத்தி கோவில் மற்றும் செண்பகத்தோப்பு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள நீர்வரத்து நிலவரங்களை எம்.எல்.ஏ. கார்த்திக் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது, நீர்வரத்து அதிகமாக உள்ள ஆபத்தான பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்ட அவர், அப்பகுதியில் கூடுதல் வனத்துறையினரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தினார். மேலும், கனமழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீர்வரத்து பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

