மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
படித்த வேலைதேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், விருதுநகர் - சிவகாசி பிரதான சாலை, ஆமத்தூரில் அமைந்துள்ள ஏ.ஏ.ஏ பொறியியல் கல்லூரியில் வரும் 22.08.2026 (சனிக்கிழமை) அன்று காலை 09:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில் எம்.ஆர்.எஃப் டயர்ஸ், ஹூண்டாய் மோட்டார்ஸ், வி.வி.வி & சன்ஸ் எடிபில் ஆயில் (இதயம்), ராயல் என்பீல்டு, மீனாட்சி மிஷன் மருத்துவமனை, டிவிஎஸ் ஸ்ரீசக்ரா, அடையார் ஆனந்த பவன், சென்டர்சாஃப்ட் டெக்னாலஜிஸ், சால்காம்ப் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ முடித்த தகுதியுடைய நபர்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
முகாமில் பங்கேற்க விரும்பும் வேலைநாடுநர்கள், தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் தங்களது விவரங்களைப் பதிவு செய்துவிட்டு, நேர்காணலின் போது தங்களது சுயவிவரக் குறிப்பு (Resume), அனைத்துக் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டை நகல்களுடன் நேரில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சேவை முற்றிலும் இலவசமானது.
முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலையளிக்கும் நிறுவனங்கள், தங்களது வருகையைப் பதிவு செய்ய 9360171161 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், இத்தனியார்துறை முகாம் மூலம் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுமூப்பு (Seniority) எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

