விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சியைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியினரின் 7 வயது மகள் ஹேமாவதி காணாமல் போய் 11 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், இதுதொடர்பாக எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிறுமி மாயமானது குறித்து காவல்துறை தரப்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அப்பகுதியிலுள்ள கிணறுகள், குட்டைகள் மற்றும் குளங்களில் தீயணைப்புத் துறையினருடன் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மோப்ப நாய் மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிறுமியை மீட்கத் தவறிய அரசு மற்றும் காவல்துறையைக் கண்டித்து, தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் தலைமையில் செஞ்சி ஆலம்பூண்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடிக்கத் தவறிய அரசு திணறி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், முதலமைச்சர் தனது சமூக வலைதளப் பதிவுகள் மீதான கவனத்தைத் தவிர்த்துவிட்டு, குழந்தையின் குடும்பத்தினரின் துயரத்தைப் புரிந்து கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

