நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் இயங்கி வரும் தனியார் தங்க நகை அடகு நிதி நிறுவனத்தில், போலி நகைகள் மற்றும் போலியான ரசீதுகளைப் பயன்படுத்தி ரூ. 22.77 லட்சம் நிதி மோசடியில் ஈடுபட்ட கிளை மேலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர், தச்சநல்லூரில் செயல்பட்டு வரும் தனியார் நகை அடகு நிதி நிறுவனத்தில் கிளை மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவர் தனது பணிக்காலத்தில், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை கூடுதல் தொகைக்கு மறு அடகு வைத்தல், போலி நகைகளை அடமானம் வைத்தல் மற்றும் போலியான ரசீதுகளைத் தயாரித்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு நிறுவனத்திற்கும் வாடிக்கையாளர்களுக்கும் பெருமளவில் நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறாக மொத்தம் 103 வாடிக்கையாளர்களை ஏமாற்றி, ரூ. 22 லட்சத்து 77 ஆயிரத்து 981 வரை இவர் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. கடந்த ஆண்டு காளிதாஸ் தொடர்ந்து 10 நாட்கள் விடுப்பில் சென்ற நிலையில், அவர் மீது நிறுவன நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வேறொரு மேலாளரைக் கொண்டு சம்பந்தப்பட்ட கிளையின் நகை அடகு மற்றும் கணக்கு விவரங்கள் விரிவாகத் தணிக்கை செய்யப்பட்டன. அந்த ஆய்வின்போதே காளிதாஸ் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
இது தொடர்பாக நிறுவனத்தின் மண்டல மேலாளர் அழகு ராஜன் அளித்த புகாரின் பேரில், தச்சநல்லூர் காவல்துறையினர் காளிதாஸ் மீது மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். மேலும், மோசடி செய்யப்பட்ட தொகையை மீட்பதற்கான தீவிர நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

